திமுக பொருளாளர் துரை முருகனோ, தலைமை என்ற வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டதாக தெரிவித்தார்.
Chennai: தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக, ரஜினி கூறிய கருத்தை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-
தொடர்ந்து ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பதனால் அது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை. நல்ல தலைமைக்கு இன்று ஆள் இல்லை. நல்ல தலைவர்கள் இருந்தார்கள் என்பது பொய்யல்ல. இன்று நல்ல தலைமை இல்லை என்பதைத்தான் சொல்கிறோம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
முன்னதாக கமல் குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பட வாய்ப்புகள் குறைந்து போனதால் கமல்ஹாசன், ரஜினி போன்றோர் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியலில் ஏற்பட்ட நிலைமைதான் அவர்களுக்கும் ஏற்படும் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு கமல் அளித்த பதிலில், 'எங்களை விமர்சிப்பவர்கள் அவர்களது ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். எல்லோருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு' என்றார்.
கடந்த வாரம், செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாநிலத்தில் சக்திவாய்ந்த தலைமைக்கு தேவை இருப்பதாக கூறினார். இதனை திமுகவும், அதிமுகவும் எதிர்த்தன. ரஜினிக்கு பதில் கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஒரு நடிகர் மட்டும்தான், அரசியல் தலைவர் அல்ல என்று கூறினார்.
திமுக பொருளாளர் துரை முருகனோ, தலைமை என்ற வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்த சூழலில் அவர்களது வெற்றிடம் நிரப்பப்படவில்லை என்று பரவலாக பேசப்படுகிறது. 2021-ல் சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது.