மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ‘தங்கம், வைரத்துக்கான மதிப்பை விட விவசாயத்துக்குத் தான் அதிக மதிப்பு கொடுக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
மத்திய அரசு, வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, இந்திய அளவில் 55 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 55 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. இதில் வேதாந்தா, 41 இடங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
இதில் காவேரிப் படுகையில் இருக்கும் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் எண்ணெய் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஓ.என்.ஜி.சி, கடலூரில் எரிவாயு எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.
‘மண்ணுக்கு அடியில் தங்கம், வைரம் போன்ற பல விலை மதிப்புள்ள பொருட்கள் இருந்தாலும், மண்ணுக்கு மேலே விவசாயம் நடந்தால், விவசாயத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தங்கமும் வைரமும் வறட்சியின் போது பசியாற்றாது’ என்று கமல்ஹாசன் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே மக்கள், போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய இடங்களில் எரிவாயு எடுக்கப்பட்டால் பெரும் அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.