கமலின் இந்த கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Chennai: புல்வாமா தாக்குதலை அடுத்து, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னை குறித்து பல இடங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று, தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த ஏன் அஞ்சுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார். கமலின் இந்த கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வியாழக் கிழமை, ஜம்மூ-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தப் பிரச்னை குறித்து கமலிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “இந்தியா, காஷ்மீரில் ஏன் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை. எதைக் கண்டு அச்சமடைகிறார்கள். நான் ‘மையம்' என்ற இதழை நடத்தி வந்தபோது இந்தப் பிரச்னை குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். அப்போது, பிரச்னையைத் தீர்க்க காஷ்மீர் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றேன். பொது வாக்கெடுப்பு நடத்தினால், இந்த தேசம் துண்டாகும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது மீண்டும் கேளுங்கள், கண்டிப்பாக அவர்கள் பதில் வேறாக இருக்கும்” என்று அதிரடியாக பேசினார்.
இதையடுத்து ‘கமல், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு கேட்கிறார்' என்று சலசலக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசியுள்ள கமல், “காஷ்மீரில் தற்போது பொது வாக்கெடுப்புக்கு எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால், காஷ்மீர் தற்போது இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் காஷ்மீர் விஷயம் குறித்து நிகழ்ச்சியின் போது மேலும் பேசுகையில், “ஏன் நம்மை பாதுகாக்கும் வீரர்கள் இறக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்'-இல் ஒழுங்காக நடந்து கொண்டால் எல்லாம் கட்டுக்குள் தான் இருக்கும்” என்று கூறினார்.