சென்ற ஆண்டு கட்சி ஆரம்பித்த கமல், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்
Chennai: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். எதிர்வரும் லோக்சபா மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கமலின் கட்சி போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்ற போதிலும், அதில் கமல் போட்டியிடவில்லை.
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த மய்யம் பொதுக் கூட்டத்தில் கமல், நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதையடுத்து, கமல், சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தைத் துவங்கியுள்ளார்.
தென் சென்னையின், ஓ.எம்.ஆர் சாலை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பிரசாரம் செய்தார் கமல். பிரசாரத்துக்கென்று பிரத்யேக வாகனத்தில் தென் சென்னை வேட்பாளர், ரங்கராஜனுடன் அவர் சுனாமி குடியிருப்புகளுக்கு வந்தார்.
அங்கு சுனாமியின் போது வீடு இழந்தவர்கள், மற்றும் நகரத்தில் பல்வேறு இடங்களில் வீடு இழந்தவர்கள் தங்கியுள்ளனர். அங்கு தனது பிரசாரப் பயணத்தை ஆரம்பித்த கமல், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் எல்லோருக்கும் வழங்கப்படும். ஊழலற்ற அரசு அமைக்கப்படும். வேலைகள் உருவாக்கப்படும்.
ஊழலை ஒழிப்பதன் மூலம் மட்டுமே நம்மால் இரண்டு மாநிலங்களை நடத்த முடியும். எங்களுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள். நாங்கள் செய்து காட்டுவோம். எப்படி செய்வோம் என்று கேட்க வேண்டாம். 40 ஆண்டுகளாக சோம்பேறித்தனத்துடன் இருந்தவர்கள், நாங்கள் எப்படி செய்வோம் என்று கேட்க வேண்டாம். நாங்கள் செய்து காட்டுவோம்' என்றார்.
கமலின் பேச்சை கேட்க கூடியிருந்த பெரும் கூட்டத்தில் ஒரு மூதாட்டி, நம்மிடம் பேசுகையில், ‘நான் இங்கு வந்தது கமல் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க. ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்க நான் இங்கு வரவில்லை. அவரது கட்சி ஓட்டு போட எங்களுக்குக் காசு கொடுத்தாலும், நாங்கள் விருப்பப்பட்ட கட்சிக்குத்தான் வாக்களிப்போம்' என்று கூறினார்.
தொடர்ந்து கமல் வேளச்சேரிக்கு வந்தார். அங்கு ஏராளமான இளைஞர்களும், ஐடி துறை ஊழியர்களும் அவரது பேச்சைக் கேட்கக் கூடினர். அதில் ஒருவர்தான் நிவேதா. ‘நான் கமலுக்கு ஆதரவளிக்கப் போகிறேன். எளிய மனிதர்களுக்கு அவர் உதவப் பார்க்கிறார். அவரை நான் ஆதரிக்கிறேன்' என்றார்.
இன்னொரு வயதானவர், ‘கமல் ஆட்சிக்கு வந்தால் நல்லதுதான். திரும்ப திரும்ப பழைய ஆட்களே ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல' என்று தனது கருத்தைக் கூறினார்.
சென்ற ஆண்டு கட்சி ஆரம்பித்த கமல், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல, காவி என் நிறம் அல்ல என்று கூறி பாஜக-வுடனான கூட்டணிக்கும் முடக்குப் போட்டார். காங்கிரஸுடன் அவர் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் நடக்காமல் போனது.
ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் தமிழகத்தில் இல்லாத நிலையில், அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவே கருதப்படுகிறது. கமல், அந்த இடத்தை நிரப்பப் பார்க்கிறார்.
மேலும் படிக்க: தேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்!!