"கடிதத்தில் கமல், ‘படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,’ என்று வலியுறுத்தினார்."
ஹைலைட்ஸ்
- சென்னையில் நடந்த ஷூட்டிங்கில்தான் விபத்து ஏற்பட்டது
- விபத்து குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது
- இந்த விபத்தில், கமல் மற்றும் காஜல் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்
Chennai: கடந்த வாரம் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி என்ற இடத்தில் ‘இந்தியன் 2' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தன. அப்போது அங்கு இருந்த கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனும், துணை இயக்குநருமான கிருஷ்ணன் என்பவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டிய நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கு நடிகர் கமல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் கமல், ‘படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,' என்று வலியுறுத்தினார்.
தற்போது கமல் எழுதிய அந்த கடிதத்திற்கு லைக்கா நிறுவனம், பதில் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளது, அந்த கடிதத்தில், “இதைப் போன்ற சம்பவங்களுக்குக் கூட்டாகப் பொறுப்பேற்று வேண்டியதைச் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞரும், சங்கரைப் போல அனுபவமிக்க இயக்குநரும் படப்பிடிப்புத் தளத்திலிருந்தீர்கள். களத்தில் நீங்கள் இருப்பதனால், நமது பாதுகாப்பு அம்சங்கள் மீது எங்களுக்கு இரட்டிப்பு நம்பிக்கை இருந்தது. மொத்தப் படப்பிடிப்பும் உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும்தான் நடந்தது,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லைக்கா நிறுவனம் சார்பில், அதன் இயக்குநர் நீலகந்த் நாராயண்பூர் எழுதியிருந்த பதில் கடிதத்தில் மேலும், “இந்த சம்பவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள், உங்களுடைய அலுவலகத்தோடு தொடர்பிலிருந்தோம். பிணவறைக்கும் நீங்கள் வந்த 15 நிமிடத்தில் நாங்கள் வந்தோம். அப்போதே சுபாஸ்கரன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா 2 கோடி ரூபாய் நிதியுதவி கொடுப்பதாக அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சையாக்கப் பொறுப்பேற்கப்பட்டது. உங்கள் கடிதம் வெளியாகும் முன்னரே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது குறித்து எந்த தகவல்களும் உங்களை வந்து சேரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்' திரைப்படத்தின் அடுத்த பாகம்தான் ‘இந்தியன் 2'. இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், பிரியா பவானி மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.