இதுதான் உன் மொழி என்று எதையாவது ஒன்றைத் திணித்தால் ஒரு போதும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது- கமல்
'இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில நாட்கள் முன்னர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதை எதிர்த்து முன்னதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது, செய்தியாளர்கள் மத்தியிலும் அமித்ஷாவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,' எனக் கூறியிருந்தார்.
இதற்கு கமல் வீடியோ வெளியிட்டு, ‘பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாசாரமும் என்பதுதான்.
இந்தியா, குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது' என்றார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதும் இந்த விவகாரம் குறித்து பேசினார் கமல். ‘எத்தனை மொழியை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் இதுதான் உன் மொழி என்று எதையாவது ஒன்றைத் திணித்தால் ஒரு போதும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. மத்திய அரசு மொழியைக் கையிலெடுக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொருளாதார மந்தநிலையை மறைப்பதற்கு இப்படி ஒன்றைச் செய்தால் மக்கள் அதை மறந்து விடுவார்களோ என்று கூட நினைத்திருக்கலாம்.
நான் இந்தி படத்தில் நடித்தவன். எனக்குப் பிடித்ததால் அந்தப் படத்தில் நடித்தேன். அதே நேரத்தில் இந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்து களம் கண்ட பள்ளி மாணவனும் நான்தான்' என்று கூறினார் கமல்.