This Article is From May 17, 2019

‘கோட்சே’ குறித்து கமல் கருத்து… வாய் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

‘கோட்சே’ குறித்து கமல் கருத்து… வாய் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இப்போது தேர்தல் ஆணையம், அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறது- முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து கூறிய கருத்துக்கு பதில் அளித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பிய நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி கமல்ஹாசன் பேச்சுக்கு பதில் தெரிவித்தார். இப்படி அகில இந்திய அளவில் கமலின் கருத்து பரபரப்பை ஏற்படுதிதயிருக்கும் நிலையில், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கமல் மீண்டும் கூறியுள்ளார். 

இது குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்து பேசாமல் இருந்தால் நல்லது என்று கூறியுள்ளது. எனவே, ஒரு முதல்வர் என்கிற முறையில் அந்த விவகாரம் குறித்து நான் எந்தவித கருத்தையும் சொல்ல மாட்டேன்.

இப்போது தேர்தல் ஆணையம், அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை இருப்பதனால், அவர்கள்தான் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சூசகமாக பதில் சொல்லி நடையைக் கட்டினார் முதலவர்.

.