மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்க ளவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி வந்தது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க நாளை மறுநாள் கடைசிநாள். விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு டி.டி. எடுத்து கட்சி தலைமை அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை, பொள்ளாச்சி தலைமையகங்களில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறு நாள் கடைசி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.