கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஹைலைட்ஸ்
- கடந்த சில வாரங்களாக மத்திய பிரதேச அரசியலில் குழப்பம் காணப்படுகிறது
- ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி
- நாளை இரவுக்குள் மத்திய பிரதேச அரசியல் சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடும்
நீண்ட அரசியல் குழப்பத்திற்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும், அதனை வீடியோவாக பதிவு செய்து அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பம் மத்திய பிரதேசத்தில் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்நாத் அரசு இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விடுவோம் என்று கமல்நாத் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் ஏற்கெனவே இரு இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.
இதில், 6 பேரின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதனால், பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துவிட்டது.
22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு முன் காங்கிரஸில் 114 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அக்கட்சியின் பலம் 92-ஆக குறைந்துவிட்டது.
4 சுயேச்சை எம்எல்ஏக்கள், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ என 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் சேர்த்து காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 99 வாக்குகள் கிடைக்கும்.
எதிரணியில், பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கமல்நாத் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நாளை மாலை முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.