ஞாயிறன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, கமல்நாதை விமர்சித்திருந்தார் அமித் ஷா.
Bhopal: வயதை கிண்டலடித்து பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் அதே வேளையில், சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டம், பேரணி என பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மிஸ்டு கால் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில், நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா பேசுகையில், 'குடியுரிமை சட்ட திருத்தம் மத்திய பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வர் கமல்நாத் கத்தி சொல்கிறார். கமல்நாத் அவர்கள், இந்த வயதில் கத்தி, குரலை எழுப்பக் கூடாது. இது உடல்நலத்திற்கு ஏற்றது அல்ல. உங்கள் மாநிலத்தில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்' என்று பேசினார்.
இந்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளோம். 265 நாட்களில் 365 வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். நிறைவேற்றுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கை உள்ளதே தவிர, வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. மக்கள் நான் செய்யும் வேலையைத்தான் பார்க்கிறார்கள்; என்னுடைய வயதை பார்ப்பது கிடையாது. இந்த முதியவன் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து விட்டனர்' என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)