இன்னும் சில மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இதனிடையே, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்றும் கமல்ஹாசன் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.
எங்கள் கரத்தை வலுப்படுத்த கமல் வர வேண்டும் எனவும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்து உள்ளார்.