கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தக்கூடாது: வேல்முருகன்
அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது. பிரபலங்களை வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால், சீசன் 1, சீசன் 2, என்று சென்ற நிகழ்ச்சியில் தற்போது சீசன்-3 நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி அவரது அரசியல் வருகைக்கும் பெரிதும் உதவியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை கமல் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்திற்கு முதலீடுகளை பெறும் விவகாரத்தில் என்ன சாதித்துவிட்டீர்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஏற்கனவே நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.
அப்படி இருக்கும்போது, தற்போது வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கிறோம் எனக் கூறுவதா? முதலீடுகளை பெற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.