This Article is From Feb 21, 2020

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி: கமல் அறிவிப்பு

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். விபத்து நடப்பதற்கு 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன்.

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி: கமல் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன் - கமல்ஹாசன்

இந்தியன்- 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

சென்னை EVP Film City அருகே கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த படப்பிடிப்பு தளத்தில் பெரிய அளவிலான கிரேன் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று துணை இயக்குநர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் கமல்ஹாசன் இன்று பிற்பகல் நேரில் சென்று சந்தித்தார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது,  நான் இங்கு எந்த நிறுவனத்தையும் சார்ந்து வரவில்லை, நான் சிறுவயதிலிருந்தே சினிமாவில் வளர்ந்தேன். இது என் குடும்பம், எனது குடும்பத்தில் இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். விபத்து நடப்பதற்கு 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். 100 கோடி, 200 கோடி வருமானம் ஈட்டுபவர்கள் என சினிமாத்துறையினர் என்று மார்தட்டிக்கொண்டாலும், ஒரு கடைநிலை சினிமா ஊழியரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தனிப்பட்ட வகையில் எனக்கு அவமானமாக இருக்கிறது. 

இனிமேலாவது சினிமாத்துறையில் எந்த ஒரு கடைநிலை ஊழியரும் படப்பிடிப்பு விபத்தால் மரணமடையாமல் இருக்க சினிமாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன். இது நடந்த விபத்திற்குப் பரிகாரம் அல்ல. இறந்தவர்களின் குடும்பத்திற்குச் செய்யும் ஒரு சிறு முதலுதவி என்றும் இனிமேல் ஒரு கடைநிலை ஊழியரும் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எனது கோரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார். 

.