This Article is From Apr 14, 2020

உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே அம்பேத்கருக்கு செலுத்தும் மரியாதை: கமல்ஹாசன்

அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் பலரும் அவரது கோட்பாடுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே அம்பேத்கருக்கு செலுத்தும் மரியாதை: கமல்ஹாசன்

உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே அம்பேத்கருக்கு செலுத்தும் மரியாதை: கமல்ஹாசன்

உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

தொடர்ந்து, சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம் என்று அவர் அம்பேத்கர் வாழ்க்கையை மேற்கோள் காட்டினார். மேலும், இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து நாம் போராடுவது, பாபா சாகேப் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் பலரும் அவரது கோட்பாடுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

”இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

.