கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வழக்கில் 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள நீதிமன்றம், 9 பேரையும் விடுதலை செய்துள்ளது. 18 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மந்தமான போலீஸ் விசாரணைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
கர்நாடகாவின் தோபா காஜனூரிலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் மூவரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தினார். கடத்தியவர்களில் ஒருவரான திரைப்பட இயக்குநர் நாகப்பா, வீரப்பனின் பிடியிலிருந்து தப்பித்தார். ஆனால், ராஜ்குமார் மற்றும் இருவர் 108 நாட்களுக்கு சத்தியமங்கலம் காட்டில் வீரப்பன் பிடியில் இருந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் வீரப்பன், சேதுக்குளி கோவிந்தன் மற்றும் சந்திர கௌடா ஆகியோர் ‘ஆபரேஷன் குக்கூன்’ மூலம், 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் மல்லு என்பவரும் மரணமடைந்தார். ரமேஷ் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
அதேபோல ராஜ்குமாரும் இயற்கை எய்தி, பல ஆண்டுகள் ஆகின்றன.
இந்த வழக்கு குறித்து தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் போலீஸின் விசாரணை குறித்தும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் சுணக்கம் குறித்தும் கடுமையாக சாடியது. நீதிமன்றம், ‘ராஜ்குமார் அல்லது அவரது மனைவி பரவத்தம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. வீரப்பன் குறித்து ஆடியோ பதிவு கொடுத்த நபரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. அந்த ஆடியோ பதிவும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. வீரப்பனுக்கும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் எப்படி தொடர்பு இருந்தது என்பது குறித்தும் தெளிவு இல்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளது.
ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு வர பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்றது. அப்போது வீரப்பன் பல கோரிக்கைகள் வைத்தார். காட்டுக்கு சென்ற குழு வீரப்பனை சமாதானப்படுத்தி ராஜ்குமார் உள்ளிட்டவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தது.
ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு ஏதும் நிதி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)