கான்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை எட்டு போலீஸ்காரர்களின் மரணம் பதிவாகியுள்ளது.
Kanpur: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு டி.எஸ்.பி மற்றும் மூன்று துணை ஆய்வாளர்கள் உட்பட எட்டு காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாநில தலைநகரான லக்னோவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள டிக்ரு கிராமத்தில் பதுங்கியுள்ள, 60 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள விகாஸ் துபே என்கிற குற்றவாளியை கைது செய்ய சென்ற போது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
“குற்றவாளியை கைது செய்வதே எங்களது நோக்கமாக இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இது திட்டமிட்ட தாக்குதல்.“ என கான்பூரின் காவல்துறைத் தலைவர் தினேஷ் குமார் கூறியுள்ளார்.
“குற்றவாளிகள் கிரமத்திற்கு செல்லும் சாலையில் செயற்கையான தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். காவல்துறையினர் தடைகளை அகற்றியபோது மறைந்திருந்த குற்றவாளிகள், காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினர்.“ என உ.பி. போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) எச்.சி அவஸ்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உ.பி. போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) எச்.சி அவஸ்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.