Karnataka's Dharwad Building Collapse: 10-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவம் நடந்த இடத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
Dharwad: Dharwad Building Collapse : கர்நாடகாவில் இன்று மதியம் கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
பெங்களூருவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தர்வாட் குமரேஷ்வர் நகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மீட்பு பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டு 10-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
15-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த இடத்தின் 3-வது மாடியில் கட்டிட வேலைகள் நடந்து வந்திருக்கின்றன. முதல் 2 தளங்களில் சுமார் 60 கடைகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
விபத்து நடந்தபோது சுமார் 150-க்கும் அதிகமானோர் அங்கு இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளை மேற்பார்வையிடுமாறு தலைமை செயலரை முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தர்வாட்டில் ஏற்பட்ட கட்டிட விபத்து (Building Collapse in Dharwad) எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. மீட்பு பணிகளை பார்வையிடுமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். கூடுதல் மீட்பு உபகரணங்களையும், பணியாளர்களையும் அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறேன். மீட்பு பணி வல்லுனர்கள் சிறப்பு விமானம் மூலம் தர்வாட் சென்றுள்ளனர்.'' என்று கூறியுள்ளார்.