This Article is From Dec 09, 2019

கர்நாடக இடைத்தேர்தல் : 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது பாஜக!!

Karnataka bypoll results: மொத்தம் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தோல்வியை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக இடைத்தேர்தல் : 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது பாஜக!!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

நடந்து முடிந்த கர்நாடக இடைத் தேர்தலில் பாஜக 15-ல் 12 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 7  எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டனர். 

இந்த நிலையில் கூடுதலாக 5 இடங்களில் பாஜக பெற்றி பெற்றிருக்கிறது. தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களின் முடிவை ஏற்பதாக கூறியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகின்றனர். 

கடந்த ஜூலை மாதத்தின்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு உடைந்தது. இதையடுத்து 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், 15 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து குண்டு ராவும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சித்தராமையாவும் விலகியுள்ளனர். ஜனநாயகத்திற்கு தான் மதிப்பளிக்க வேண்டியுள்ளது என்று ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய பின்னர் சித்தராமையா தெரிவித்தார். 

2.  தோல்வி குறித்து பேட்டியளித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், '15 தொகுதிகளில் மக்கள் அளித்திருக்கம் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். தோல்வியை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம். இருப்பினும் நாங்கள் மனம் தளரவில்லை' என்று கூறியுள்ளார். 

3. இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகளில் 12 தொகுதிகள் முன்பு மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் வசம் இருந்தன.

4. பதவி விலகிய 13 எம்.எல்.ஏ.க்களை பாஜக களத்தில் நிறுத்தியது. அவர்கள் வருங்கால அமைச்சர்கள் என்று முன்பு முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.

5.  அடுத்ததாக, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் தனக்கு முன்பிருக்கும் சவால் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மக்கள் பணியாற்ற எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

6. 'தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைச்சர்களாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறோம். அவர்கள் பகுதியில் கட்சி வளர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எடியூரப்பா தெரிவித்தார்.

7. தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு துரோகம் இழைக்க கூடாது என்பதை கர்நாடக மக்கள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அதற்கு எதிராக செயல்படுபவர்களை மக்களே தண்டிப்பார்கள் என்பதைத்தான் கர்நாடக தேர்தல் முடிவு அனைத்து மாநிலங்களுக்கும் காட்டுகிறது. ஜார்க்கண்ட் மக்கள் கன்னடர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.' என்றார்.

8. இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டன. கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் இரு கட்சியிடையே உறவு சுமுகமாக இல்லை. அதிகாரத்தில் பங்களித்தால் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என்று காங்கிரஸ் முன்பு கூறியிருந்தது. 

9. கடந்த ஜூலை மாதத்தின்போது கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 2023 வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

10. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவிட்டிருந்தது. 
 

.