அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், தன்னை வந்து சந்திக்குமாறு சபாநாயகர் சம்மன்.
கர்நாடகா சட்டப்பேரவையில் நீடிக்கும் குழப்பத்திற்கு மத்தியில் இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடித்து, 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டுமென சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, திங்களன்று இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய தினம் 10 முதல் 11 மணி வரை அவையை நடத்தலாம் என்று முடிவு செய்த போதும், அமைதி ஏற்படவில்லை.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் மூலம் எதேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கான முயற்சியில் குமாரசாமி ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பின. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தை அரசு மேலும் நீடிக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், குமாரசாமி தான் "அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயற்சிக்கவில்லை" என்று கூறினார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதத்திற்கு நேரம் தேடுவதற்கான எனது ஒரே நோக்கம், அறநெறியைப் பற்றி பேசும் பாஜக, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை எவ்வாறு தகர்த்தெறிய முயற்சிக்கிறது என்பதை முழு நாட்டிற்கும் தெரியப்படுத்துவதற்கே என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம், அம்மாநில சட்டப்பேரவையில் 3 வது நாளாக நேற்றும் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் விவாதம் நடத்த வேண்டியிருப்பதால் வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசம் கோரினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது.
எனினும் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியாது என சபாநாயகர் ரமேஷ்குமார் உறுதிபட தெரிவித்தார். தங்கள் கோரிக்கையை ஏற்குமாறு கூறி, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள், அவைக்குள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாலை வரை கூட காத்திருக்கத் தயார் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறும் சபாநாயகர் கூறினார்.
விவாதம், எதிர்ப்பு, அமளி, தர்ணா என இரவு 11.40 வரை பேரவை நீடித்தது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடித்து, 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டுமென ஆணையிட்ட சபாநாயகர், அவையை ஒத்திவைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜக-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும்.