கேக் வெட்டி குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கும் எம்.எல்.ஏ ஜெயராம்
Bengaluru: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவினை கடுமையாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகள் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தனது பிறந்தாளை வெள்ளிக்கிழமை கொண்டாடியுள்ளார்.
கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் துருவேகரேவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெள்ளை கையுறை அணிந்து, பெரிய சாக்லேட் கேக்கினை வெட்டி அதனை அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பலருக்கு பகிர்ந்தளித்துள்ளார். மேலும், அம்மாவட்டத்தின் குப்பி நகரில் பிரியாணியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இதுவே முதலானது அல்ல. கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திருமணங்கள் உட்பட அனைத்து சமூகக் கூட்டங்களுக்கும் தடை விதித்த சில நாட்களில் அம்மாநில முதல்வர் பி.எஸ் எடியூரப்பா மார்ச் 15 அன்று பெல்காவியில் நடந்த பாஜக தலைவரின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அடுத்த நாளில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட டி கே சிவகுமாரை கௌரவிப்பதற்காக நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் விதிகளை மீறினர்.
இப்படியான சூழலில் கர்நாடகாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதியதாக 10 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். சமீபத்திய நிலவரப்படி அம்மாநிலத்தில் 6 பேர் இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 34 பேர் வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிய வருகின்றது.
சமீபத்தில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 10 பேரில் மைசூருவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் மற்றும் பெங்களூரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முழு முடக்க (LOCKDOWN) அறிவிப்பானது இம்மாதம் 14-ம் தேதியுடன் முடிவடைகின்றது. ஆனால், பாதிப்புகளை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கர்நாடக பாஜக ஆதரிக்கின்றது. பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.