This Article is From Sep 04, 2019

'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா!!

பொருளாதார மந்த நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கைது நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிவக்குமாரின் கைது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்கிறார் எடியூரப்பா.

Bengaluru:

 பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுவிக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று முதல்வர் எடியூரப்பா பதில் அளித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், 'டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர் விரைவில் விடுதலை அடைவதற்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்னைப் பொருத்தளவில் எனது வாழ்க்கையில் நான் யாரையும் வெறுக்கவில்லை. சிவக்குமார் விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்' என்றார்.

பணமோசடி விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைதான நிலையில் கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கைதாகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொள்கைளால் தோல்வியடைந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

'சிவக்குமாரின் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலை காட்டுகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயல்கிறது' என்று காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியுள்ளார். 
 

.