பாஜக தரப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்தது, அக்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹைலைட்ஸ்
- டிசம்பர் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடந்தது
- 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது
- பாஜக, இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்
Bengaluru: கர்நாடக மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இடைத் தேர்தல் நடந்த நிலையில், இன்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, கர்நாடகாவில் ஆட்சியமைத்து 4 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று வரும் முடிவுகளைப் பொறுத்து அரசு கவிழுமா நிலைக்குமா என்று தெரிந்துவிடும். கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, கர்நாடகாவின் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் - மஜத அரசிலிருந்து, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர். அதைத் தொடர்ந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்டு, இடைத் தேர்தல் நடந்தது.
இன்று வெளியாகும் இடைத் தேர்தல் முடிவுகளில், குறைந்தபட்சம் 7 இடங்களிலாவது வெற்றியடைந்தால்தான் பாஜக, ஆட்சியைத் தக்கவைக்கும். முடிவுகள் வரும் நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் பலம் 224 என ஆகும். தற்போது பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முறையே 66 மற்றம் 34 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
தற்போது தேர்தல் நடக்கும் 15 இடங்களில் 12 காங்கிரஸ் வசமும், 4 மஜத வசமும் இருந்தன. இன்று இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் கர்நாடக அரசு, பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாக இருந்த காங்கிரஸும் மஜதவும் தனித்துக் களம் கண்டுள்ளன. ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டது. ஆனால், இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல மஜத, இந்த இடைத் தேர்தலிலும் ‘கிங்-மேக்கராக' வலம் வரலாம் என்று கணக்குப் போடுகிறது (File)
அதே நேரத்தில் பாஜக தரப்பு, மொத்தம் இருக்கும் 15 இடங்களில் 13 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. முதல்வர் எடியூரப்பா, “நாங்கள், எங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வோம். மக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு உள்ளது,” என்றுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் இந்த தேர்தலை, ‘நீக்கம் செய்யப்பட்டவர்களை வீழ்த்துங்கள்,' என்று கோஷத்தை முன் வைத்துச் சந்தித்தது. அதே நேரத்தில் பாஜக, 13 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களையே மீண்டும் களத்தில் நிறுத்தியுள்ளது. அவர்களை முதல்வர் எடியூரப்பா, “வருங்கால அமைச்சர்கள்,” என்றுள்ளார்.
பாஜக, இந்த இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், மீண்டும் அரசியல் டிராமா அரங்கேற வாய்ப்புள்ளது.
பாஜக தரப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்தது, அக்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலரும் மற்ற கட்சிகளில் இணைந்துள்ளனர். சிலர் சுயேட்சைகளாக தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
காங்கிரஸின் சித்தராமையாவுக்கும் இது முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், அவருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயே ஒரு அலை கிளம்பியுள்ளதாம்.
வழக்கம் போல மஜத, இந்த இடைத் தேர்தலிலும் ‘கிங்-மேக்கராக' வலம் வரலாம் என்று கணக்குப் போடுகிறது.