This Article is From May 06, 2020

வெளி மாநில தொழிலாளர்களுக்கான ரயில்களை ரத்து செய்த கர்நாடக அரசு! காங். கடும் தாக்கு

கர்நாடக முதல்வர் ரயில்களை ரத்து செய்வதற்கு முன்பாக கட்டிட தொழில் அதிபர்களை நேற்று மாலை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.

வெளி மாநில தொழிலாளர்களுக்கான ரயில்களை ரத்து செய்த கர்நாடக அரசு! காங். கடும் தாக்கு

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரயில்களை பல மாநிலங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்
  • சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்
  • ரயில்களை கர்நாடக அரசு ரத்து செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
Bengaluru:

கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்காக 10ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றை கர்நாடக அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

கர்நாடகாவில் வெளிமாநில தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் முதல்வர் எடியூரப்பா, மாநிலத்திலேயே தங்கி பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வெளி மாநில தொழிலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வெளிமாநில தொழிலாளர் நலன் அதிகாரி மஞ்சுநாதா பிரசாத் தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். அதில், 'கர்நாடக அரசு சார்பாக நாள்தோறும் 2ரயில்கள் வீதம் 5 நாட்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது ரயில்களின் சேவையை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதம் நேற்று ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள், பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலையின்மையால் ஊதியம் கிடைக்காமலும், பசி பட்டினியால் கொடுமைப்பட்ட அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

கால்நடையாக, சைக்கிள் பயணம், திருட்டுத் தனமாக லாரிகளில் ஒளிந்து கொண்டு செல்வது போன்றவகளை செய்து, சொந்த மாநிலத்திற்கு அவர்கள் கிளம்பினர்.

இவ்வாறு நடைபயணமாக செல்கையில், வெளி மாநில தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தன. பல இடங்களில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஏற்கனவே கொரோனா நடவடிக்கையில் தீவிரம் காட்டி வந்த அரசுக்கு, தொழிலாளர்கள் பிரச்னை புதிய தலைவலியை கொடுத்தது.

இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடங்கியது. பஸ் பயணத்தால் சமூக இடைவெளி சாத்தியப்படாது என்பதால் ரயில்கள் மூலம் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக சிறப்பு ரயில்களை சில மாநிலங்கள் இயக்கத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ரயில்களை கர்நாடகாவின் எடியூரப்பா அரசு ரத்து செய்துள்ளது. 

எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'நாங்கள் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் 3,500 பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளோம். அதே நேரத்தில், அவர்கள் மாநிலத்திலேயே தங்கியிருந்து பணிகளை தொடங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் ரயில்களை ரத்து செய்வதற்கு முன்பாக கட்டிட தொழில் அதிபர்களை நேற்று மாலை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், 'வெளி மாநில தொழிலாளர்களை பிணைக் கைதிகளாக நாம் வைத்திருக்க முடியாது. நாம் அவர்களது நம்பிக்கையை பெற வேண்டும். அரசும், கட்டிட தொழில் அதிபர்களும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், 'ஏற்கனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அரசு அனுப்பியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கர்நாடகாவில் தங்கி வேலைபார்க்கலாம். அல்லது சொந்த ஊருக்கு செல்லலாம். அவர்கள் விருப்பம் எதுவக இருந்தாலும் அதுபற்றி முதல்வரிடம் பேசுவோம்' என்று தெரிவித்தார். 

.