BS Yediyurappa Cabinet: முதற்கட்டமாக 17 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Bengaluru: கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா (BS Yediyurappa) தலைமையிலான அமைச்சரவை, 3 வாரங்களுக்கு பின்னர் இன்று விரிவாக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா, ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.
முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 23 நாட்களாக அமைச்சரவை பதவியேற்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, இன்னும் 2-3 மணி நேரத்தில் இறுதி செய்யப்பட்ட அமைச்சரவை பட்டியலை அமித் ஷாவிடம் இருந்து பெறவுள்ளதாக தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், அமைச்சரவை விரிவாக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 20 நாட்களுக்கும் மேலாக எந்த அமைச்சர்களும் இல்லாமல் தனிநபராக எடியூரப்பா ஆட்சி செய்து வந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை இப்படி தனிநபராக ஆட்சி செய்வது என்பது ஜனாதிபதி ஆட்சியை போல் இருப்பதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்நிலையில், 20 நாட்களுக்கு பின்னர் இன்று முதற்கட்டமாக கர்நாடகாவில் 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன்படி, கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், சி.என்.லக்ஷ்மண் சங்கப்பா சாவடி, அசோகா, ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமன்னா, கோட்டா ஸ்ரீவாஸ் பூஜாரி, மதுஸ்வாமி, சந்திரகாந்த கவுடா, கணேஷ், பிரபு சவுகான், ஜோலி சசிகலா அன்னா சாகேப் உள்ளிட்ட 17 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷூம் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்-மஜத கூட்டணியை கவிழ்த்த பின்னர் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த எடியூரப்பாவுக்கு அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு பெரும் சவால் ஆனதாக இருந்திருக்கும். முந்தைய ஆட்சியில் இருந்த 17 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ததன் மூலம், ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இது பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவியாக இருந்தது.