அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10.30 முதல் 11.30க்குள் நடைபெறும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
New Delhi: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா கிட்டத்தட்ட 23 நாட்களாக அமைச்சரவை பதவியேற்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, இன்னும் 2-3 மணி நேரத்தில் இறுதி செய்யப்பட்ட அமைச்சரவை பட்டியலை அமித் ஷாவிடம் இருந்து பெறவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பாஜகவை சேர்ந்த எடியூரப்பா, ஜூலை மாதம் முதலமைச்சர் ஆனார். பிற அமைச்சர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், அமைச்சரவை விரிவாக்கப் படாமல் உள்ளது.
தொடர்ந்து, மொத்தமுள்ள 34 இடங்களுக்கு, முதல்கட்டமாக 13 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் வாஜூபாய் வாலா முன்னிலையில், இன்று காலை 10.30 முதல் 11.30க்குள் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோகா, ஸ்ரீராமுலு உள்ளிட்ட கர்நாடக பாரதிய ஜனதா மூத்ததலைவர்களும், எம்எல்ஏக்கள் சுனில்குமார், அங்காரா, மேலவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட புதுமுகங்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதேபோல், முந்தைய ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக விலங்கிய காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒரு சிலர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.