விவசாயக் கடன் ரத்து அறிவிப்பை குமாரசாமி வெளியிட்டதில் இருந்து, அவர் மீது பாஜக-வினர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்
Bengaluru: கர்நாடக முதல்வர் குமாரசாமி, பதவியேற்றவுடன் விவசாயத்துக்காக வாங்கப்பட்ட கடன் 46,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த கடன் தள்ளுபடி முழுவதும் மாநில பட்ஜெட்டிலேயே அடங்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்கிறது.
விவசாயக் கடன் ரத்து அறிவிப்பை குமாரசாமி வெளியிட்டதில் இருந்து, அவர் மீது பாஜக-வினர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். குறிப்பாக, படிப்படியாக கடன் தள்ளுபடிக்கு மாநில அரசு எடுக்கும் நடைமுறை விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், மொத்தக் கடன் தொகையையும் ஒரே நேரத்தில் ரத்து செய்யப்படும் என்று குமாரசாமி தெரிவத்துள்ளார்.
பாஜக தரப்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் கட்சியினர் மத்தியில் பேசுகையில், “கர்நாடக அரசு, விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து ஒறு புறம் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மறுபுறம் கடனைத் திரும்பச் செலுத்துமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது” என்றார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்துக்கும் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “விவசாயிகளுக்கு கடன் குறித்து நோட்டீஸ் அனுப்புவது தேசிய வங்கிள்தான். அரசு தரப்பில் எந்தவித நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் மேலும், “விவசாயக் கடன் குறித்து பாஜக-வின் அணுகுமுறை அவர்கள் கூறும் கருத்திலிருந்தே தெரிகிறது. வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி மாநில பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம். அப்போது விவசாயக் கடனை ஒரே கட்டத்தில் ரத்து செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும். நிதி சார்ந்து இருக்கும் எந்த வித சட்டங்களையும் மீறாமல் நாங்கள் விவசாயக் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவோம்.
விவசாயக் கடன் தள்ளுபடியை என் தலைமையிலான அரசு எப்படி அமல் செய்கிறது என்பது மற்ற மாநில அரசுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். அப்படி கவனமாக இந்த தள்ளுபடித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி வரை 1,70,000 விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டு மட்டும் 9,000 கோடி ரூபாய் அளவுக்கான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 31 ஆம் தேதியோடு 12 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.
எனக்கு முன்பு பல மாநில அரசுகள், விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டன. அவர்கள் அதை எப்படி அமல் செய்தார்கள் என்று சோதனை செய்து பாருங்கள். அப்போதுதான் எங்கள் அரசு எப்படி வேலை செய்கிறது என்பது உங்களுக்குப் புரியும். நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அமல் செய்வதற்குப் பல்வேறு தடங்கள்கள் இருந்தன. அனைத்தையும் மீறி நாங்கள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது என் அரசின் மிகப் பெரிய வெற்றி” என்று விளக்கியுள்ளார்.