This Article is From Dec 15, 2018

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் தமிழகத்துக்கு கோரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் தமிழகத்துக்கு கோரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது தமிழக அரசு. ஆனால் நீதிமன்றம், ‘கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' என்று தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘நான் தனிப்பட்ட முறையில், தமிழக அரசுக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். கர்நாடக அரசையும், கர்நாடக குடிமக்களையும் உங்களின் சகோதரர்களாக நினைத்துக் கொள்ளுங்கள். நாம் இருவரும் இந்தியா - பாகிஸ்தான் போல அல்ல. நாம் இருவரும் சகோதர - சகோதரிகள். மேகதாது விவகாரம், சட்டத்தால் சரி செய்ய முடியாதது. நாம் தான் இது குறித்து பேசி, சுமூகத் தீர்வை எட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர், ‘மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகா, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா..?' என்றதற்கு, குமாரசாமி, ‘முதலில் நாம் உட்கார்ந்து பேசுவோம். ஊடகங்கள் வாயிலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, நாம் இந்தப் பிரச்னையை உட்கார்ந்து பேச வேண்டும் என்பதைத்தான். நான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன். நான் உங்களோடுதான் இருக்கிறேன்.

இது குறித்து என்னப் பிரச்னை இருந்தாலும், இரு தரப்புக்கும் சாதகமான வகையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த 125 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையில் நீடித்து வருகிறது. இது இப்படியே இருக்கக் கூடாது' என்று பதிலளித்தார்.

.