This Article is From Aug 26, 2018

’மறப்போம், மன்னிப்போம்!’- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து குமாரசாமி

இன்று தனது ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி

’மறப்போம், மன்னிப்போம்!’- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து குமாரசாமி
Bengaluru:

கர்நாடகா, குடகு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்க்கச் சென்ற இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொறுமை இழந்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லிவிட்டார். இதையடுத்து, கர்நாடக அரசுக்கும் ராணுவத் துறை அமைச்சருக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘இந்த விவகாரம் குறித்து நாம் அனைவரும் மறந்துவிட்டு, ஒருவரையொருவர் மன்னித்துக் கொள்வோம். தொடர்ந்து மீட்புப் பணிகளில் கவனம் செலுத்துவோம்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குடகு பகுதிக்குச் சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தார். அப்போது கர்நாடக மாநில அமைச்சரான மகேஷ், ‘செய்தியாளர் சந்திப்புக்கு நேரமில்லை. இதை முடித்துக் கொள்ளலாம்’ என்றார். அதற்கு சீதாராமன், ‘உங்களுக்கு எப்படி உங்கள் கால அட்டவணை முக்கியமோ அதைப் போன்று எனக்கு இது முக்கியம். ஒரு மாநில அமைச்சரின் சொல்படி மத்திய அமைச்சர் நடக்க வேண்டுமாம். இதை நம்பவே முடியவில்லை’ என்று கடுகடுத்தார். அப்போது ஒருவர், ‘மேடம் அனைத்தும் மைக் மூலம் பதிவாகிக் கொண்டிருக்கிறது’ என்று கூற, உடனே சீதாராமன், ‘ஆகட்டும். அனத்தும் ரெக்கார்டு ஆகட்டும்’ என்று கொதித்தார்.

இந்த விஷயம் பூதாகரமாகவே, கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஷ்வரா, ’மாநில அரசுகள், அரசியல் சட்ட சாசனத்திலிருந்துதான் அதிகாரத்தைப் பெறுகின்றன. மத்திய அரசிடமிருந்து அல்ல. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சட்ட சாசனம் சம பாதியாகவே அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளது. நாங்கள் ஒன்றும் மத்திய அரசுக்குக் குறைந்தவர்கள் அல்ல. நாம் இருவரும் பார்ட்னர்கள்தான்’ என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து இன்று தனது ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடகுக்கு வந்தபோது நிகழ்ந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சில விரும்பத்தகாத விஷயங்களுக்கு அமைச்சர் உள்ளானது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரிடம் போன் மூலம் பேசினேன். இந்த விவகாரம் குறித்து நம் அனைவர் இடத்திலும் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களை மறந்து, மன்னிப்பதற்கான தருணம் இது. தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்வதில் கவனம் செலுத்துவோம். மீட்புப் பணிகளுக்கு தொடர்ந்து மத்திய அரசிடமிருந்து முழு ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். முக்கியமாக ராணுவத் துறை அமைச்சரிடமிருந்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.