பிரதமரை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி (கோப்புப் படம்)
New Delhi: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் கன மழை பெய்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளை சரி செய்யத் தேவையான நிவாரண நிதியை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரிடம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை வைத்திருந்தார்
இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.1,999 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார். மேலும், வெள்ள பாதிப்புகளினால் 3,705.87 கோடி ரூபாய் கர்நாடக மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.