ஹைலைட்ஸ்
- மே 18-ல் காவிரி தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது
- இனி காவிரி நீரை, மேலாண்மை வாரியம் தான் பங்கிட்டுத் தரும்
- கர்நாடக முதல்வர், மேலாண்மை வாரிய விதிகளில் மாற்றம் கோரியுள்ளார்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும்' என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நீரை பங்கிடுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 18 ஆம் தேதி, 'மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழை வருவதற்குள் அதற்கான வேலைகளை முடித்திருக்க வேண்டும்' என்று ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான அதிகாரிகள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. தொடர்ந்து, காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ளும் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் வாரியப் பிரதிநிகளின் பட்டியலைக் கொடுக்கமாறு கேட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, 'காவிரி மேலாண்மை வாரியத்திற்கான கர்நாடக பிரதிநிதிகள் பட்டியலைக் கொடுப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மேலாண்மை வாரியத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகளில் மாறுதல் செய்ய வேண்டும். குறிப்பாக, விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப விதிகள் மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் பல்லாண்டு காலமாக விவசாயிகள் ஒரு விதத்தில் பயிரிட்டு வருகின்றனர். அதை உடனடியாக மாற்ற முடியாது. இந்த பியிரிடும் முறையை மாற்றுவதற்கு சில காலம் பிடிக்கும். இந்தப் பிரச்னை சரியாக கையாளப்படவில்லை என்றால், விவசாயிகள் போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ளது' என்று எச்சரித்துள்ளார்.
குமாரசாமி, சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து இந்த விஷயங்களைக் குறித்து எடுத்துக் கூறினார். இந்நிலையில், பிரதமருக்குக் கடிதம் வாயிலாகவும் மீண்டும் அதே விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)