எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து தான் முடிவெடுக்கவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
New Delhi:
கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அம்முடிவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இந்நிலையில், தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி 16 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு முதல்வர் குமாரசாமி, “பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். எனது அரசு ஸ்திரமாகத்தான் உள்ளது. ஆனால், அதற்கு காலக்கெடு வேண்டும்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நோட்டீஸ் சமர்பித்தது. தொடர்ந்து, ‘வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.