This Article is From Jan 22, 2019

சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல்: புகைப்படம் வெளியானது

விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல்: புகைப்படம் வெளியானது
Bengaluru:

கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

இதனால், காங்கிரஸ் மேலிடம் அக்கட்சி எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த 3 தினங்களாக தங்க வைத்தது. அமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கும் தப்பிச் செல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியில் விருந்தின் போது, காம்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷுக்கும், விஜயநகர் தொகுதி எம்எல்ஏ அனந்த்சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கிருந்த பீர் பாட்டிலால் அனந்த் சிங்கை, கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அனந்த் சிங்கின் மண்டை உடைந்தது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன‌ர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது.

.