This Article is From May 22, 2018

'பாஜக-வுக்கு எதிராக வெளியிட்ட டேப் போலியானது!'- காங்கிரஸ் எம்எல்ஏ திடுக் தகவல்

கர்நாடக அரசியல் களேபரத்தில், பாஜக-வுக்கு எதிராக இதைப் போன்ற பல டேப்களை வெளியிட்ட காங்கிரஸுக்கு, இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

'பாஜக-வுக்கு எதிராக வெளியிட்ட டேப் போலியானது!'- காங்கிரஸ் எம்எல்ஏ திடுக் தகவல்

Karnataka Congress MLA Shivaram Hebbar said the voice in the video was not of his wife.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸுக்கு, இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.  
  • ஒரு ஆடியோ பதிவில் எடியூரப்பாவே பேசியதாகவும் காங்கிரஸ் கூறியது.
  • ஹெப்பார் கூறிய கருத்துக்கு இதுவரை காங்கிரஸ் பதில் கூறவில்லை.
New Delhi: பாஜக கர்நாடக சட்டமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டேப் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த டேப் போலியானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரே தெரிவித்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
  
கர்நாடக அரசியல் களேபரத்தில், பாஜக-வுக்கு எதிராக இதைப் போன்ற பல டேப்களை வெளியிட்ட காங்கிரஸுக்கு, இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றவுடன், பாஜக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம், பாஜக-வின் தலைவர்கள் பலர் பேரம் பேசுவது போன்ற ஆடியோ பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது காங்கிரஸ். அதில் ஒரு ஆடியோ பதிவில் எடியூரப்பாவே பேசியதாகவும் காங்கிரஸ் கூறியது.

ஆனால், இதில் ஒரு ஆடியோ பதிவு பொய்யென்று கூறியுள்ளார் எலப்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சிவராம் ஹெப்பார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், `பல செய்தி சேனல்கள் பாஜக தலைவர்களுடன் என் மனைவி பேசுவது போன்ற ஒரு ஆடியோ பதிவு ஒளிபரப்பி வருகின்றன. ஆனால், அதில் பேசுவது என் மனைவி இல்லை. இதை வெளியிட்டவர்களுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கடுகடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பாஜக தோல்வியடையும் என்று பலரால் கணிக்கப்பட்டது. ஆனால், வாக்கெடுப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே பதவி விலகினார் முதல்வராக நியமிக்கப்பட்ட எடியூரப்பா. `இந்த பதவி விலகும் முடிவு பாஜக-வின் உயர்மட்டக் குழுவினால் எடுக்கப்பட்டது. குதிரைபேர குற்றச்சாட்டில் இருந்து விலகும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று பாஜக வட்டாரம் எடியூரப்பாவின் பதவி விலகல் குறித்து கூறுகிறது. ஹெப்பார் கூறிய கருத்துக்கு இதுவரை காங்கிரஸ் கட்சி தரப்பு எந்தவித அதிகாரப்பூர்வ பதிலையும் கூறவில்லை.  

அதே நேரத்தில் பாஜக-வின் அமித் மால்வியா, `எலப்பூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பரின் நேரடி பதிலை நாம் பார்தோம். அவர், பாஜக தரப்பிடமிருந்து அவரின் மனைவிக்கு எந்த போன் அழைப்பும் வரவில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் எந்தவித வெட்கமுமின்றி பாஜக தான் ஹெப்பர் மனைவியிடம் பேசியது என்று பொய்யை சொல்லி வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.  

கடந்த சனிக்கிழமை காலை, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால், பெரும்பான்மை வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எங்கு இருந்தனர் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவரை பாஜக-வின் சோமசேகர ரெட்டி, தன் கிடுக்குப்பிடியில் வைத்திருந்தார் என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.   

 
.