हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 10, 2019

மும்பை சொகுசு விடுதிக்கு சென்ற கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு அனுமதி மறுப்பு!

கர்நாடக அரசியல் நெருக்கடி: காங்கிரசின் பத்து எம்எல்ஏக்கள் மற்றும் ஜே.டி.எஸ் எம்எல்ஏக்கள் மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் மாநிலத் தலைவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

Advertisement
Karnataka Edited by
Mumbai:

மும்பை நட்சத்திர ஓட்டலில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் ஓட்டலின் வாயிலிலே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா விடுத்துள்ளனர். கடந்த 6ம் தேதி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்சியை காப்பாற்றும் கடைசி முயற்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த, காங்கிரஸ் - மஜத கூட்டணியை சேர்ந்த தற்போதைய மாநில அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கான கடிதத்தை முதல்வர் குமாரசாமியிடமும், ஆளுநரிடம் கொடுத்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் 78 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் 115 உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. இதில், 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியிருப்பதால், தற்போது ஆளுங்கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 103 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. 2 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில், ராஜினாமா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள மும்பை நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் நேரில் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஓட்டலின் வாயிலிலே அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலத் தலைவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement

தங்களுக்கு வந்த அந்த கடிதத்தை காட்டியே சிவக்குமாருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனினும், சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

தொடர்ந்து, தன்னை தன் அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும், அங்குள்ள சகோதரர்களுடன் நிதானமாக தேநீர் அருந்தியபடியே பேச வேண்டும் என்று அவர் காவல்துறையினரிம் கூறியுள்ளார். மேலும், அனுமதி மறுத்தாலும் நான் திரும்பி செல்ல மாட்டேன். நாள் முழுவதும் இங்கு காத்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கர்நாடக அரசியலில் ஒன்றாக பிறந்த நாங்கள் ஒன்றாகவே அரசியலில் இறப்போம். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் மீது நாங்கள் அன்புடனே இருக்கிறோம். எந்த மிரட்டலும் இல்லை. நண்பர்கள் உடனான பிரச்னையை பேசி தீர்த்து கொள்வோம். உடனே விவாகரத்து செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவக்குமாருக்கு எதிராக ராஜினாமா எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் பாஜகவினர் முழக்கமிட்டு வருகின்றனர். கர்நாடகாவுக்கு திரும்பி செல்ல வலியுறுத்தி வருகின்றனர்

இதனிடையே, ஓட்டலில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரை சந்திக்க விருப்பம் இல்லை எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement