224 பேர் கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் - ஜேடிஎஸ்க்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.
Bengaluru: தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா பயணம் சென்ற கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி, இந்தியா திரும்பியதும், ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, எப்படியாவது கூட்டணி ஆட்சியை காப்பாற்ற வேண்டியதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசித்ததாக தெரிகிறது.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அமெரிக்கா சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து அவரசரமாக பெங்களூரு திரும்பிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி. தேவேகவுடா, துணை முதல்வர் பரமேஸ்வரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, "கூட்டணி அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறும்போது, அதிருப்தி எம்எல்ஏக்களுடன், கட்சி இன்னும் தொடர்பில் உள்ளதாகவும், ஜூலை 12 அன்று சட்டசபை கூட்டம் தொடங்கும் போதே ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
224 பேர் கொண்ட கர்நாடகா சட்டசபையில், காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஒரு சுயேட்சை வேட்பாளர், ஒரு பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களை சேர்த்து 118 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும், 13 எம்எல்ஏக்கள் விலகுவதன் மூலம் காங்-ஜேடிஎஸ் கூட்டணியின் பலம் 105 ஆக இருக்கும். அதே சமயத்தில் பாஜகவின் பலமும் 105 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை இழந்துள்ளதால், புதிய அரசாங்கத்தை அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.