கர்நாடகாவில் காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன
ஹைலைட்ஸ்
- கர்நாடகத் தேர்தலை அடுத்து முன்னாள் தேர்தல் ஆணையர் கருத்து
- விகிதாச்சார சீர்திருத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்தல்
- காங்கிரஸ்- மஜத கூட்டணி கர்நாடகத்தில் ஆட்சி அமைத்துள்ளது
Hyderabad:
கர்நாடகாவில் அரசியல் கேலிக் கூத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்கு இருந்த ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தி இது குறித்து கூறுகையில், `கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் முடிவு வந்த பிறகு ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. அங்கு இருக்கும் காங்கிரஸ், பாஜக மற்றும் மஜத என எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முன்னர் யாருக்கும் ஆட்சி அமைக்க பொதுமான எம்.எல்.ஏ-க்கள் இல்லாத நிலையில், சட்டமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். மீண்டும் அங்கு தேர்தல் நடத்த ஆணையிட்டு இருக்க வேண்டும். நான், குடியரசுத் தலைவரின் ஆட்சி தான் ஒரே வழி என்று சொல்ல வரவில்லை. ஆனால், தேவையில்லாத பல விஷயங்களுக்கு இது ஒரு முடிவுகட்டியிருக்கும். எனவே தான், குடியரசுத் தலைவர் ஆட்சி சரியாக இருந்திருக்கும் என்று சொல்கிறேன்' என்றார்.
அவர் தேர்தலை சீர்திருத்தம் குறித்தும் பேசினார். `இந்தியத் தேர்தல் அமைப்பில் சில மாறுதல்கள் கொண்டுவர வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். விகிதாச்சார அடிப்படையில் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். மேலும், 33.33 சதவிகித வாக்குகளை ஒருவர் பெற்றால் தான், அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். சில நாடுகளில் 50 சதவிகித ஓட்டுகள் பெற்றால் தான் வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள். நாம் முதலில் 33.33 சதவிகிதத்துக்கு நம் சட்டத்தை மாற்ற வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.