Bengaluru: கர்நாடகாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புக்கான நிதியாக 2000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிததில், ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை பெய்த கன மழை காரணமாக, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 17 பேர் பலியானதாகவும், 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடகு மலைக்கு செல்லும் முக்கிய மலைச் சாலைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நிலச்சரிவு காரணமாக பல குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தும், பல குடும்பங்கள் வீடிழந்தும் முகாம்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 53 முகாம்களில், 7,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 50,000 ஆயிரம் உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மொத்த பாதிப்புகளின் அளவு 3000 கோடி ரூபாயை எட்டும் என்பதால், மத்திய அரசு உடனடி நிதி உதவியாக 2000 கோடி ரூபாயை வழங்குமாறு குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.