அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும்.
ஹைலைட்ஸ்
- சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார்,அதிருப்தி எம்.எல்.ஏக்களை நேற்று சந்தித்தார்
- 'எனக்கு 70 வயதாகிறது'- சபாநாயகர்
- இந்த வயதில் என்னால் அரசியல் ஆதாயம் தேட முடியாது- சபாநாயகர்
Bengaluru: கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களில் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தை, சில நாட்களுக்கு முன்னர் மாநில சட்டசபை சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரை சந்தித்து கொடுத்தனர். அதை அவர் ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத் தொடர்ந்து நீதிமன்றம், ‘6 மணிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் முன்னர் ஆஜராக வேண்டும்' என்று நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சட்டமன்ற உறுப்பினர்களை, நேரில் சந்தித்தார் சபாநாயகர் ரமேஷ் குமார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர், மனம் திறந்து பேசியுள்ளார்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. கூட்டணி அரசுக்குச் சாதகமாக செயல்படுவதற்காகத்தான் சபாநாயகர் ரமேஷ் குமார், ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அவரோ, “நான் வேண்டுமென்றே ராஜினாமா கடிதங்களை பரிசீலக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் என்னை முதன்முறையாக ஜூலை 6 ஆம் தேதி, எந்த வித முன்னறிவிப்புமின்றி சந்திக்க வந்தனர். அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை.
இப்போது எனக்கு 70 வயதாகிறது. இனியும் அரசியல் காய் நகர்த்தல்களை செய்து என்னால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது. இந்த விவகாரம் என்னை ஒரு தவறான மனிதன் போல சித்தரித்துள்ளது. தயவு செய்து என்னை நிம்மதியாக இறக்கவிடுங்கள். ராஜினாமா கடிதங்களை என்னிடம் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சமர்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நான் பலகட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் சட்ட சாசனத்தின்படி நான் நடந்து கொள்ள வேண்டும்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் என்னிடம் இப்போது தான் முறையிட்டுள்ளனர். முதலில் அவர்கள் மும்பை சென்றனர். தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், மாநிலத்தின் சட்டசபை சபாநாயகரை அவர்கள் பார்க்கவேயில்லை. இது சரியான நடைமுறையா?” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக உச்ச நீதிமன்றம், சபாநாயகர் ரமேஷ் குமாரை, ராஜினாமா குறித்து உரிய முடிவெடுத்து ஒரு நாளைக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அது குறித்து பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், “ராஜினாமா குறித்து சட்ட சாசன முறையில் நான் ஆராய வேண்டும். ஒரு நாள் இரவுக்குள் அது முடிந்துவிடாது. நான் அதிருப் எம்.எல்.ஏ-க்களை சந்தித்த வீடியோவை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிவைப்பேன்” என்று முடித்துக் கொண்டார்.