ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது.
New Delhi:
அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கே முடிவெடுக்கும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நோட்டீஸ் சமர்பித்தது. தொடர்ந்து, ‘வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் என்றும் அவர்களை கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.