16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிடும்
New Delhi/Bengaluru: கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் எனத் தெரிகிறது. இப்படி தொடர்ந்து பரபரப்பு நிலவிவரும் கர்நாடக அரசியல் களத்தின் அடுத்த அதிரடியாக, சட்டசபை சபாநாயகர் கேஆர் ரமேஷ் குமார், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், நாளை தன்னை வந்து சந்திக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
இதுவரை கர்நாடக சட்டமன்றத்தில் இருக்கும் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், 3 மஜத எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியன்று, சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, பாஜக-வை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய மாநில எதிர்க்கட்சித் எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜக-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும்.