கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு!
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு!
- இந்தியாவில், 29,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிப்பு
- சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த மாவட்டங்களில் உற்பத்திக்கு அனுமதி
Bengaluru: கொரோனா வைரஸ் பரவல் இல்லாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த கர்நாடகா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில், 29,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவில் கர்நாடகா தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் கையெழுத்திட்டுள்ளார். அந்த உத்தரவில், சாமராஜநகர், கோப்பல், சிக்மங்கலூரு, ராய்ச்சூர், சித்ராதுர்கா, ஹாசன், சிவ்மோகா, ஹாவேரி, யாத்கிர், கோளார், உடுப்பி, கொடகு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த மாவட்டங்களில் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாநகராட்சி எல்லையை தாண்டியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் இயங்கலாம், எனினும், மால்களில் உள்ள கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இந்த மாவட்டங்களில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கடைகளும் திறக்கலாம். அவை மார்க்கெட் மற்றும் மால்களில் இருந்தால், அதனை திறக்க அனுமதியில்லை.
அனைத்து வேலை இடங்களிலும், 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி. அதில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
மேலும், பெங்களூர் கிராமப்புறம், பல்லாரி மற்றும் மாண்டியா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடைகளையும், தொழிற்சாலைகளும் மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மீதமுள்ள 8 மாவட்டங்களில் எந்த மாற்றுமுமில்லை என்றும், தற்போது உள்ள கட்டுபாடுகளே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சலூன்கள் மற்றும் டெய்லர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது வணிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், முதன் முறையாக அத்தியாவசிய, அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளும் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. எனினும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், விதிமுறைகள் தளர்த்தி தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, சமூக விலகல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடு தளர்வுகள் என்பது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.