This Article is From May 07, 2020

விமர்சனங்களுக்கு பிறகு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்களை அனுமதிக்கிறது கர்நாடகா

சிறப்பு ரயில்கள், பேருந்துகள் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டபோதும் கூட பல தொழிலாளர்கள் நடந்தே செல்லவும், சட்டத்திற்குப் புறம்பாக லாரிகளில் செல்லவும் முயன்றுகொண்டிருக்கின்றனர். 

விமர்சனங்களுக்கு பிறகு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்களை அனுமதிக்கிறது கர்நாடகா

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்கள் மே 8 முதல் 15 வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bengaluru:

முழு முடக்க நடவடிக்கையையடுத்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு, பல நூறு மைல்கள் நடந்தே செல்லத் தொடங்கினர். வழியிலேயே பலர் இறந்துபோனார்கள். எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து விவாதிக்கத்தொடங்கியதையடுத்து மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை அறிவித்தது. ஆனால், கர்நாடக மாநில முதல்வர், புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களை விட்டு சென்றுவிட்டால் கட்டுமானம் போன்ற தொழில்கள் பாதிக்கப்படும் என குறிப்பிட்டு, கர்நாகட மாநிலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படாது என அறிவித்தார்.

இந்த முடிவானது பல தளங்களில் விமர்சனங்களைக் கிளப்பியதையடுத்து தற்போது அம்மாநில முதல்வர் எடியூரப்பா புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஜார்கண்ட், ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளிடம், கர்நாடக மாநிலத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களை திருப்பி அனுப்ப ஒப்புதல் கோரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இரு மாநிலங்கள் ஒப்புதல் கிடைத்தபின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்கள் மே 8 முதல் 15 வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எடியூரப்பா, ஏற்கெனவே ஒரு லட்சம் தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதாகவும், இந்நிலையில் மீதமுள்ள தொழிலாளர்கள் கட்டிட வேலைக்கு வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பினை பாஜக வரவேற்றது. இந்த அறிவிப்பு கர்நாடகாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்றும் அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

முதல்வரின் இக்கருத்திற்குக் காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பாஜக புலம் பெயர் தொழிலாளர்களை மாநிலத்திலேயே தங்க வைக்க முயல்கிறது என்றும், புலம் பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் அல்ல என்றும் காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

“தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வது அல்லது இங்கேயே தங்கி இருப்பது குறித்த முடிவுகளைப் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் அல்ல. தொழிலாளர்களின் உடல் நலம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். தவறாக எதாவது நடந்தால் யார் பொறுப்பேற்பது? நாம் இன்னமும் கொத்தடிமை முறையை கடைப்பிடிக்கின்றோமா என்ன?“ என அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா #MigrantLivesMatter என்கிற ஹேஷ்டேக்கினை இட்டு ட்விட் செய்துள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு அறிவித்துள்ள 1,600 கோடி நிவாரணத் தொகை போதாது என்றும் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மத்திய அரசு 171 ரயில்களை இயக்கியுள்ளதாகவும், 56 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை நேற்று இயக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக சிறு குறு தொழில்கள் முற்றிலும் முடங்கின. இதை நம்பி இயங்கி வந்த புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குள்ளானது. அவர்களுடைய உணவு, இருப்பிடம் உள்ளிடவை நிச்சயமற்றதாய் மாறின.

சிறப்பு ரயில்கள், பேருந்துகள் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டபோதும் கூட பல தொழிலாளர்கள் நடந்தே செல்லவும், சட்டத்திற்குப் புறம்பாக லாரிகளில் செல்லவும் முயன்றுகொண்டிருக்கின்றனர். 

.