இளம்பெண் அமுல்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார் எடியூரப்பா.
Bengaluru: பாகிஸ்தான் ஜிந்தாபாத் என மேடையில் முழக்கமிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் அமுல்யா லியேனா நக்சல் அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாசுதீன் உவைசி முன்னிலையில் இளம்பெண் அமுல்யா லியோனா 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கமிட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், '' அமுல்யாவின் தந்தையே அவரது மகளின் கை கால்களை உடைக்க வேண்டும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, நான் அவரை பாதுகாக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இரண்டாவதாக, அமுல்யாவுக்கு பின்னால் இருக்கும் குழுக்களை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். நக்சல் அமைப்புகளுடன் அமுல்யாவுக்கு தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் நம்மிடம் உள்ளன. அவர் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நக்சல் அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கை தேவை '' என்று கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று ஐதராபாத் எம்.பி. அசாசுதீன் உவைசி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமுல்யா லியோனா, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)' என்று முழக்கமிட்டார்.
இதன்பின்னர் அமுல்யாவை பலர் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து, அவரை மீட்பதற்குச் சிலர் முயற்சி செய்தனர். இதன்பின்னர் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியா வாழ்க)' என்று அமுல்யா முழக்கமிட்டார். தொடர்ந்து அவர்,'ஹிந்துஸ்தான் ஜிந்தபாத் மற்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் இதற்கிடையிலான வித்தியாசம் என்ன....' என்று பேசுகிறார்.
ஃபேஸ்புக்கில் கடந்த வாரம் பதிவிட்ட அமுல்யா, 'எந்த நாடாக இருந்தாலும், அனைத்து நாடுகளும் வளமாக இருக்கட்டும்! இந்தியா வாழ்க! பாகிஸ்தான் வாழ்க! வங்கதேசம் வாழ்க! ஸ்ரீலங்கா வாழ்க! நேபாளம் வாழ்க! ஆப்கானிஸ்தான் வாழ்க! சீனா வாழ்க! பூட்டான் வாழ்க!' என்று கன்னடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமுல்யாவின் சர்ச்சைக்குரிய முழக்கத்திலிருந்து விலகியே இருக்கிறார் ஐதராபாத் எம்.பி. அசாசுதீன் உவைசி. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 'அமுல்யா கூறியதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. நம்முடைய எதிரி நாட்டிற்கு நாம் ஆதரவு தெரிவிக்க முடியாது' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே அமுல்யாவின் தந்தையும் அவருக்கு எதிராகக் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,'அமுல்யா சொன்னது தவறு. அவர் சில முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டுள்ளார். எங்கள் பேச்சை அவர் கேட்கவில்லை.' என்று தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் முடிந்த பின்னர் அமுல்யாவின் வீட்டின் மீது நேற்றிரவு கற்களை வீசிய வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.