This Article is From Jul 24, 2019

கர்நாடகாவில் கவிழ்ந்தது குமாரசாமி ஆட்சி! -’கர்மாவின் விளையாட்டு’என பாஜக கிண்டல்!

கடந்த சில வாரங்களாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்களும், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தாங்கள் அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

கர்நாடகாவில் கவிழ்ந்தது குமாரசாமி ஆட்சி! -’கர்மாவின் விளையாட்டு’என பாஜக கிண்டல்!

கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனால், முதல்வர் பதவியை இழக்கும் நிலையையும் குமாரசாமி அடைந்தார்.

சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவித்த பின், பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா சட்டப்பேரவையில் வெற்றி குறியீட்டை காண்பித்து, தனது ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கர்நாடக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் “ கர்மாவின் விளையாட்டு” என்று கிண்டலாக பதிவி ஒன்றை வெளியிட்டது. 

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார். 

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். அதன்படி கடந்த வியாழன் முதல் சட்டப்பேரவையில் வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நடைபெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜகவினர் சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். 

தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் மூலம் எதேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கான முயற்சியில் குமாரசாமி ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பின. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தை அரசு மேலும் நீட்டிக்க முயற்சிப்பதாகவும் சாடினர்.

ஏற்கனவே ஆளுநர் விதித்த கெடுவையும் கண்டுகொள்ளமால் புறக்கணித்தது குமாரசாமி அரசு. கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு முறை ஆளுநர் கெடு விதித்தார். எனினும், அதை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

இதைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, செவ்வாயன்று நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி தெரிவித்த சபாநாயகர், குமாரசாமிக்கு கெடு விதித்தார். 

இறுதியாக நம்பிக்கை தீர்மானத்தின் மீது குமாரசாமி பேசும்போது, நான் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நான் தயார். சபையில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியல்ல. நான் அளித்த வாக்கை காப்பாற்றுவேன். வாக்கெடுப்பை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இதற்காக சபாநாயகர் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது முதல்வர் பதவியை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். நான் அரசியலில் நுழைந்ததே விபத்து தான். முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.  
 

.