அப்பளம்போல நொறுங்கிய காரிலிருந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை சிரமப்பட்டு போலீசார் மீட்டெடுத்தனர்.
ஹைலைட்ஸ்
- தர்மஸ்தலாவிலிருந்து திரும்பும் வழியில் நள்ளிரவில் விபத்து ஏற்பட்டது
- சம்பவ இடத்தில் 12 பேரும், சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர்
- பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இழப்பீடு அறிவித்துள்ளார்.
Bengaluru/Chennai: கர்நாடகாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவர்.
கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் குனிகல் அருகேயுள்ள அம்ருதூரில் நள்ளிரவில் இந்த கோர விபத்து நடந்தது.
கார் ஒன்றின் மீது மோதிய SUV கார் ஒன்று சாலையில் உள்ள தடுப்பில் மோதி அப்பளம்போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடங்குவார்கள். காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களில் 10 பேர் கிருஷ்ணகிரியையும், மற்ற 3 பேர் பெங்களூருவையும் சேர்ந்தவர்கள். கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தும்குரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வம்சி கிருஷ்ணா கூறுகையில், 'SUV வாகனத்திலிருந்தவர்களில் 10 பேரும், காரில் இருந்தவர்களில் 3 பேரும் உயிரிழந்தனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையின் மைய தடுப்பில் கார் மோத மற்றொரு கார் நிலை தடுமாறி இரண்டும் விபத்துக்கு உள்ளாகியது.
SUV கார் கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது. காரில் இருந்த 4 பேர் தர்மஸ்தலாவுக்கு சென்று கொண்டிருந்தனர்' என்றார்.
அப்பளம்போல நொறுங்கிய காரிலிருந்து, உயிரிழந்தவர்களின் உடல்களைச் சிரமப்பட்டு போலீசார் மீட்டெடுத்தனர்.
உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சிக்கனப்பள்ளியை சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சம் அளிக்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அளிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகாவிலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களைப் பத்திரமாகத் தமிழகம் மீட்டு வருவதற்கு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.