New Delhi: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு விதித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து வருகின்றன. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குப் போவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
எனவே, அவர் முன்னர் ஒரு முறை வெளிநாடுகளுக்குப் போக உச்ச நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெற்று சென்றார். அதைப் போலவே இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
இது குறித்தான விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, ‘முன்னர் ஒரு முறை வெளிநாடுகளுக்குச் சென்ற போது, நீதிமன்றம் சில நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்குப் பிறப்பித்திருந்தது. அது இப்போதும் தொடர வேண்டும்’ என்று தெரிவித்தார். அதை நீதிமன்றம் ஏற்றது.
அதன்படி கார்த்தி சிதம்பரத்துக்கு, இந்தப் பயணத்தின் போது வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு தொடங்க கூடாது, எப்போது சென்று திரும்ப வருகிறார் என்பது குறித்தான விவரத்தை தெரியப்படுத்த வேண்டும், மீண்டும் இந்தியாவுக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட வதிகள் அடங்கும்.