ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 2 வாரங்களுக்கு நீதிமன்றக் காவலில் இருக்க உள்ளார். இதனால், அவர் திகார் சிறைக்கு நேற்றிரவு அனுப்பப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சிதம்பரத்தின் சிறையடைப்புக்குப் பின்னர் கார்த்தி சிதம்பரம், “என் தந்தை விரைவில் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
“எனக்கும் சென்ற ஆண்டு இதே போலத்தான் நடந்தது. மீண்டும் அதே நடைமுறையை என் தந்தைக்குப் பின்பற்ற உள்ளார்கள். சீக்கிரமே என் தந்தை வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். சட்ட ரீதியாக இனி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக இப்படித்தான் சட்டம் இயங்குகிறது. போலீஸ் கஸ்டடிக்குப் பின்னர் நீதிமன்றக் காவல்தான் கொடுக்கப்படும்.
நீதிமன்றக் காவலுக்கான முகாந்திரம் இந்த வழக்கில் இல்லை. 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விஷயம் குறித்து இப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு தரப்பு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பே இல்லை.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கும் கண்டிப்பாக பெரியதாக உருபெற வாய்ப்புகள் குறைவு. வழக்கு விசாரணையும் செய்யப்படாது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இப்படி அலைக்கழைக்கப்படுகிறோம்” என்று பேட்டியளித்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில்தான் இருந்தார். அவர் டெல்லியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய் கிழமை, சிதம்பரத்தின் சிபிஐ கஸ்டடியை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். நேற்று அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'பொருளாதார குற்ற விவகாரங்களில் மிக அரிதாகத்தான் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கில் உள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது முன் ஜாமீன் வழங்க தகுதியான வழக்கு இது அல்ல' என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழகில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.