ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத் துறை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகுளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி.
300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக இருந்த தனது தந்தையான ப.சிதம்பரத்தின் செல்வாக்கை கார்த்தி, பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புபடுத்தி, சென்ற ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
அவரைப் போலவே கார்த்தியின் சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் எஸ்.பாஸ்கரராமனும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார் கார்த்தி.