மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர், அருண் துமால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
New Delhi: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் (BCCI) புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Saurav Ganguly) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து பிசிசிஐ-யின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் (Amit Shah) மகன் ஜெய் ஷா (Jay Shah), நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர், அருண் துமால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலியின் தேர்வைத் தவிர்த்து மற்ற இருவரின் தேர்வும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram), ஒருபடி மேலே போய் கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார்.
“எனது தந்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்து, நான் பிசிசிஐ அமைப்பின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். எப்படி இந்த ‘தேசியவாதிகளும்', ‘பக்தாஸும்' ரியாக்ட் செய்திருப்பார்கள்?” என்று குதர்க்கமாக கேள்வியெழுப்பியுள்ளார் கார்த்தி.
குஜராத் கிரிக்கெட் சங்கம் மூலம் ஜெய் ஷா, நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் எந்தப் பதவியிலும் அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் இருந்த பலரும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்து வருகின்றனர். உதாரணத்திற்கு பிசிசிஐ-யின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலில் ராஜஸ்தானின் முதல்வர் அஷோக் கெலோடின் மகன் வைபவ் கெலோடின் பெயர் உள்ளது. அதேபோல இன்னொரு காங்கிரஸ் முக்கிய புள்ளியான டி.ஒய் பாட்டிலின் மகனும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.