Chennai: மெரினாவில் கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க அரசுக்கு உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்.
நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் மறைவு அனுசரிக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், ஆளும் அ.தி.மு.க அரசு மற்றும் தி.மு.க இடையே நீதிமன்றத்தில் கடும் வாதம் நடந்தது. கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டி நள்ளிரவு தி.மு.க மனு தாக்கல் செய்தது. அதற்கான பதில் மனுவை இன்று காலை அரசு தாக்கல் செய்தது.
அதில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், முதலமைச்சர்களாக இருக்கும் போது காலமானவர்களுக்கே மெரினாவில் சமாதி அமைக்கப்படும் மரபு இருப்பதாக கூறினார். இதற்கு தி.மு.க தரப்பிலும் பதில் வாதம் வைக்கப்பட்டது. “ தி.மு.கவின் நிறுவனரான அண்ணா, என் வாழ்வும், உயிரும் கருணாநிதி தான் என்று கூறியிருக்கிறார். கருணாநிதியை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்வது மரியாதையாகாது. ஒரு கோடி தி.மு.க தொண்டர்களை இது அவமதிப்பதாகும்” என்றது தி.மு.க தரப்பு.
மேலும், “ காமராஜர் மற்றும் ராஜாஜியின் கொள்கைகள் திராவிடக் கொள்கையில் இருந்து வேறுபட்டது. ஆகையால் அவர்களுக்கு காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க கொள்கைகள் இரண்டும் ஒத்தவை. ஆகையால் எம்.ஜி.ஆருக்கு மெரினாவில் இடம் வழங்கப்பட்டது. “ என்றது தி.மு.க தரப்பு.
மேலும் “ முதலமைச்சர்கள் தான் மெரினாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. துக்கம் அனுசரித்து அரசு ஏன் இடம் வழங்கக் கூடாது? முதலைமைச்சர்களுக்கு இடம் வழங்க மாநில அரசிடம் அனுமதி பெறத் தேவை இல்லை” என்றும் வாதம் வைத்தது.
விசாரணையின் போது, ஜெயலலிதாவை மெரினாவில் அடக்கம் செய்ய பெறப்பட்ட அனுமதியை காண்பிக்குமாறும் நீதிபதி கேட்டார்.
முன்னதாக மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை அரசு காரணம் காட்டியது. ஆனால், அந்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதால், எந்த சட்டசிக்கலும் இல்லை என்று நீதிபதி கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, மெரினாவில் கருணாநிதிக்கு சமாதி அமைக்க இடம் வழங்கக் கோரி உத்தரவிட்டார். சட்ட சிக்கல்களை விளக்க அரசு தரப்பு தவரிவிட்டதாகவும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
இந்த தீர்ப்பைக் கேட்டு ராஜாஜி அரங்கில் இருந்த தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ஸ்டாலின், துரைமுருகன், கனி மொழி உள்ளிட்டோர் உணர்ச்சி வசப்பட்டனர்.